சிலம்புச் செல்வர் ம.பொ.சி கட்டபொம்மன் புகழ் பரப்பிய வரலாறு

பாஞ்சாலங் குறிச்சி மன்னன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16ல் தூக்கிலிடப்பட்டார்.இந்த மாவீரனை “கொள்ளைக்காரன்” என்றும் “கொலைகாரன்” என்றும் பொய்யாக வருணித்து நூல்களை எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள் அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள்

இப்படி, ஒன்றை நூற்றாண்டு காலம் சரித்திராசிரியர்களால் நிலை நாட்டபட்டு விட்ட பழியிலிருந்து கட்டபொம்மனின் புகழ் மிக்க வரலாற்றை மீட்டுக் கொடுத்தது தமிழரசுக்கழகம்.வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழைப் பரப்ப தமிழரசுக்கழகம் அதன் தலைவர் மாண்புமிகு மா.பொ. சிவஞானம் அவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் இன்று கட்டபொம்மன் இந்தியாவின் விடுதலைப் போருக்கு வித்திட்டவீரனே என்ற உண்மையை உலகமே ஒப்புக் கொண்டு விட்டது.அந்த வீரன் புகழ் பரவிய வரலாறு கீழ்வருமாறு.:

முதல் நூல்:

1949 சூலைத்திங்களில் “வீரபாண்டிய கட்டபொம்மன்“ பெயரில் திரு.ம.பொ.சி ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.அதன் பின்னரும் “சுதந்திரவீரன் கட்டபொம்மன்” “கயத்தாற்றில் கட்டபொம்மன்” “பொம்மன் புகழிலும் போட்டியா? என்னும் பெயருடைய நூல்களை எழுதி வெளியிட்டார்.தமது ‘தமிழ்முரசு’,“தமிழன் குரல்’, “செங்கோல் ஆகிய எடுகளிலும்; இன்னும் புகழ் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகளிலும் கட்டபொம்மனைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் ம.பொ.சி எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்தன.

முதன்முதலில் கட்டபொம்மன் விழா:

முதன் முதலாக, 1949, அக்டோபர் 16ல் சென்னை ராஜாஜி மண்டபத்திற்குப் பின்புறம் உள்ள பூங்காவில் தமிழரசுக் கழகத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோரும் தமிழரசுக் கழகத் தலைவர்களும் இதில் கலந்து கொண்டு பேசினர்.இதன் பின்னர் ஆண்டுதோறும் தமிழ் நாட்டிலுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் அக்டோபர் 16ல் தமிழரசுக்கழகத்தின் சார்பில் வீரபாண்டியன் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வந்தது.

திரைப்படங்கள்:

முதன் முதலில் திரு. எம்.ஏ. வேணு அவர்களின் எம்.ஏ.வி பிக்சர்சாரால் தயாரிக்கப்பட்ட கலைஞர் ஏ.பி. நாகராசனால் கதை வசனம் எழுதி இயக்கப்பட்ட “நாவலர்” என்னும் திரைப்படத்திலே கட்டபொம்மன் ராணுவக் கோர்ட்டில் விசாரிக்கப்படும் நிகழ்ச்சி ஒரு காட்சியாகப் பட்டது. திரு. ஏ.பி. நாகராசனே கட்டபொம்மனாகத் தோன்றி அற்புதமாக நடித்தார்.

பின்னர் திரு. பி.ஆர். பந்துலுவின் பத்மினி பிக்சர்சார் “வீரபாண்டிய கட்டபொம்மன்” என்னும் பெயருடைய முழு நீள வண்ணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். இப்படம் 100 நாட்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றியுலா வந்தது.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக அற்புதமாக நடித்தார். இந்தப் படம் தெலுங்கு மொழியில் ‘டப்’
செய்யபட்டு ஆந்திர நாட்டிலும் பவனி வந்தது.

நாடகங்கள்:

தமிழரசுச் கழகத்தின் பிரச்சார பலத்தால் நாடக உலகிலும், வீரபாண்டியன் செல்வாக்குப் பெற்றான். டி.கே.எஸ்,சகோதரர்கள். நாடககுழுவினர் மதுரை ரா. வேங்கடாசலம் அவர்களால் எழுதப்பட்ட “முதல் முழக்கம்”. என்னும் பெயருடைய கட்டபொம்மன் நாடகத்தை வெற்றிகரமாக நடத்தினர்.இதனை டில்லியில் பிரதமர் நேருஜி முன்பும், குடியாசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் முன்பும் நடித்துக் காட்டினர்.

45

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களும் தமது நாடகக் குழுவின் சார்பில் “ கட்டபொம்மன்” நாடகத்தை தமிழ்நாடெங்கிலும் வெற்றிகரமாக நடத்தினார் பிரதமர் நேருஜியும் கண்டு களித்தார். ஏ. பி . நாகராசன் அவர்கள் “நாவலர்” படத்தில் கட்ட பொம்மன் வேடந்தாங்கி நடித்த பகுதியை தமிழரசுக்கழக மாநாடுகளிலும் 1954-ல் ஆவடியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையிலும் நடித்து கட்டபொம்மன் புகழைப் பரப்புவதிலே பெரும் பங்கு கொண்டார்.

பிற மொழிகளிலே கட்டபொம்மன்:

வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வரலாற்றை ம.பொ.சி தமிழில் எழுதி வெளியிட்ட பின்னர், அதனை முதல் நூலாகக் கொண்டு வேறு பல இந்திய மொழிகளிலும் உலக நூல்களிலும் வழி நூல்கள் வெளி வந்தன.சென்னை இந்தி பிரசார சபையாரால் கட்டபொம்மன் நாடகம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, அந்த சபையின் மாணவர்களால் நடத்தப்பட்டது. டில்லி உள்ளிட்ட வடபுலத்திலும் நடத்தப்பட்டு வேற்று மொழிப் பிரதேசங்களிலும் வீரபாண்டியன் புகழ் பரப்பப்பட்டது.

டாக்டர் கமில் சுவலபில் என்னும் செக்கோசுலோவேகிய தமிழறிஞர் ம.பொ.சி எழுதிய நூலை வழிகாட்டியாகக் கொண்டு ‘செக்’ மொழியிலே வீரபாண்டியன் வரலாற்றை எழுதி வெளியிட்டு செக்கோஸ்லோவேகிய நாட்டிலும் கட்டபொம்மன் புகழைப் பரப்பினார்.சோவியத் ருஷ்ய நாட்டிலேயும் ருஷ்ய மொழியிலே பல்வேறு சந்தர்ப்பங்களில் வீரபாண்டியக் கட்டபொம்மனின் வீர
வரலாறு பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரை வடிவில் வெளிவந்தது.

திரு. தாமோதரன் என்னும் ஐ.சி. எஸ் அதிகாரி ‘இந்து’ தினசரி பத்திரிகையிலே வீரபாண்டியன் வரலாற்றைஆங்கிலத்தில் எழுதி வெளி வரச் செய்தார்.சென்னை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ ஆங்கில நாளிதழிலேயும் ‘முட்செடி‘ என்னும் தலைப்பில் ராஜாஜி கட்டுரைஎழுதி பிரிட்டிஷாருக்கு கட்டபொம்மன் ஒரு முட்செடியாக விளங்கினார் என்றார்.அரங்கநாதன் என்பவர் எழுதிய விரிவான கட்டுரை “எக்ஸ்பிரசில்” வெளி வந்து வங்கத்திலிருந்து வெளிவரும் ‘யுகாந்தர்’ என்ற புகழ் மிக்க ஏட்டிலும் கட்டபொம்மன் புகழ்பாடும் கட்டுரை வெளியானது.பிளிட்ஸ் என்னும் புகழ் மிக்க ஆங்கில வார எட்டிலும் வீரபாண்டியன் வரலாறு வெளியிடப்பட்டது. வடபுலத்தில் பாட்னாவிலிருந்து வெளிவரும் ‘டிரிப்யூன்’ என்னும் ஆங்கில நாளிதழிலேயும் வீரபாண்டியன் வரலாறு தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அயல் நாடுகளிலே …..

சென்னையில் பத்மினி பிக்சர்சார் தயாரித்த வீர பாண்டியகட்டபொம்மன் என்னும் தமிழ்த் திரைப்படமானது லண்டனிலே அங்குள்ள பத்திரிக்கைகளுக்காகச் சிறப்பு நிகழ்ச்சியாக வெளிப்பட்டது இந்திய அரசு தயாரித்த ‘ இந்தியாவின் விடுதலைப்’ போர் என்னும் ஆங்கில டாக்குமெண்டரி திரைப்படத்திலே வீர பாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சாலங்குறிச்சிப் போரும் இணைக்கப்பட்டு உலகமெங்கும் காட்டப்பட்டு வருகிறது.

கிராமியக் கலைஞர்கள்:

இன்னும் வில்லுப்பாட்டுக் கலை குழுவினர் பலர் தமிழ்நாட்டிலே கட்டபொம்மன் கதையே நடத்தி வருகின்றனர். கிராமப்புற நாடகக் கலைஞர்களும் கட்டபொம்மன் கதையை ‘தெருக்கூத்து’ பாணியிலே நடத்தி வருகின்றனர்.நினைவுச் சின்னங்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையிலே நகரமன்றத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழுவுருவச்சிலை பிரதான இடத்தில் நிறுத்தப்பட்டது.மதுரை நகரிலும் நகர மன்றத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழுவுருவச்சிலை மக்கள் கூட்டம் அதிகமாக நடமாடும் முச்சந்தி ஒன்றிலே நிறுத்தபட்டுள்ளது.

‘கயத்தாறு‘ என்னும் சிற்றூரையடுத்துள்ள கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திலே மிகப் பெரிய நினைவுத்தூண் ஒன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டு பெருந்தலைவர் காமராசரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

p2

கல்விக் கூடங்களிலே

கட்டபொம்மன் வீரவரலாறு திரு. ம.பொ.சி. எழுதிய நூல் முதன்முதலில் பெங்களூர் பல்கலைக் கழகத்தாரால் இண்டர் மீடியட் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது.பின்னர் தமிழ்நாட்டிலும் உயர்நிலைப் பள்ளிகளிலே 10ஆம் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது.சென்னை இந்திப் பிரசார சபையிலும் இந்தியில் எழுதப்பட்ட கட்டபொம்மன் வரலாறு பாடமாக வைக்கப்பட்டது. எண்ணற்ற கல்லூரிகளில் மாணவர்களே டி.கே.எஸ்.சகோதரர்கள் நடத்திய “முதல் முழக்கம்” என்னும் நாடகத்தை தாங்களே முயற்சி எடுத்துக் கொண்டு பயின்று நடிப்பது வழக்கமாகி விட்டது.

வானொலிகளிலே……..

சென்னை, கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு,ஆகிய உஷீமீநாட்டு வெளிநாட்டு வானொலி நிலையங்களிலே தலைவர் ம.பொ.சி. அவர்கள் கட்டபொம்மனைப் பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகள். பதிவு செய்யப்பட்டு வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன.

அரசுகளின் ஆதரவு :

தி.மு.க.ஆட்சி காலத்திலே முதல்வர் கலைஞர் அவர்களின் ஆர்வத்தால் பாஞ்சாலங்குறிஞ்சியிலே பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவில் கட்டபொம்மன் நினைவாலயம் எழுப்பப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே முதல்வர் காமராசர்ஆதரவோடு பாஞ்சாலங்குறிஞ்சியில் பரங்கியரால் அழிக்கப்பட்டுப் போன – வீரபாண்டியன் வழிபட்டு வந்த வீர ஜக்கம்மாள் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

இன்னும் தமிழக அரசின் ஆதரவோடு தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் சிற்றூர்களிலும் சாலைகளுக்கும், பூங்காக்களுக்கும், குடியிருப்புகளுக்கும்,வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திர வீரனா? என்னும் வினா தமிழக சட்டமன்றத்தில் சிலரால் எழுப்பப்பட்டபோது ஐயத்திற்கிடமின்றி, அவன் தேச சுதந்திரத்திற்குப் போராடிய வீரனே என்று அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கப்பட்டது.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் நுழைவாயிலிலே கட்டபொம்மன் உருவச் சிலை நிறுத்தப்படவேண்டுமென்று தமிழரசு கழகம் அரசுக்கு கோரிக்கை அனுப்பிய போது கட்டபொம்மன் வரலாறு சம்பந்தபட்ட இடங்களிலே ஏதேனும் ஒன்றில் நினைவுச் சின்னம் அமைக்க தனியார்களோ அமைப்புகளோ முன்வந்தால் அவர்களுக்கு அரசு முன்வந்து உதவியளிக்கும் என்று கடிதம் மூலம் உறுதியளிக்கப்பட்டது.சட்டமன்றத்திலும் இந்த உறுதிமொழி ஒரு முறை கேள்விக்கு பதிலாகப் பதிவு செய்யப்பட்டது. பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றைப் படமாக்கியபோது மத்திய அரசு பலவகையிலும் உதவி புரிந்தது.

தொல் பொருள் துறை :

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி புரிந்த பாஞ்சாலக்குறிச்சி என்னும் ஊர் பரங்கியர் ஆட்சியால் அழிக்கப்பட்டு பூகோளப் படத்திலிருந்தே அப்பெயர் அகற்றப்பட்டது அந்த இடமானது அழிக்கப்பட்ட மாளிகைகளின் அடித்தளங்களோடு கூடிய புதை பொருள் பிரதேசமாக இருந்து வந்தது.மூதறிஞர் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது திரு. ம.பொ.சி-யின் வேண்டுகோளுக்கிணங்க அந்த இடத்தைப் பார்வையிட்டு மத்திய அரசின் தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தார். இப்போது தமிழக அரசின் தொல்பொருள் துறைக்கு அது மாற்றப்பட்டுள்ளது.

கவிஞர் – அறிஞர் புகழ் மாலை :

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை ஆகிய கவிஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை புகழ்ந்து செய்யுட்கள் பலவற்றைக் கொண்ட கவிதைகளைப் பாடியுள்ளனர்.இராஜாஜி, அண்ணா ஆகிய அறிஞர் பெருமக்கள் வீரபாண்டிய கட்டபொம்மனைப் புகழ்ந்து பேசியுள்ளனர்.1957 சென்னை செயிண்ட் மேரீ¢ஸ் மண்டபத்தில் தமிழரசு கழகத்தினர் நடத்திய கட்ட பொம்மன் விழாவிலே ராஜாஜி தாமதமாகவே திடீரெனத் தோன்றி பொம்மனுடைய புகழை விவரித்துப் பேசினார்.

This entry was posted in சிலம்புச் செல்வர் ம.பொ.சி கட்டபொம்மன். Bookmark the permalink.

One Response to சிலம்புச் செல்வர் ம.பொ.சி கட்டபொம்மன் புகழ் பரப்பிய வரலாறு

  1. SK RAJENDRAN says:

    வணக்கம்.

    கட்டபொம்மன்.காம் எனது நீண்டக்கால கனவு .. இளைய பாரதத்திற்கு தேச பக்தியும் சோம்பலில் இருத்தும் அறியாமையிலிருந்தும் அவர்களை வெளியே கொணர நமது நாம் கடும் பணி ஆற்றவேண்டும்.. வீரம் இந்தியனின் இரத்தத்தில் ஊறியுள்ள விஷயம் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். வணக்கம்.

    அன்புடன் சுகி இராஜேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>