ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்துப் போரிட்டவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் தவிர சிவகங்கை மருது சகோதரர்கள், நாகலாபுரம் ஏழாயிரம் பண்ணை ஆகியோருடைய பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. ஆங்கில கும்பினியார் இந்தியாவைப் பிடித்து ஆளுவதற்கு முன்பு டில்லி சுல்தான்களின் ஆளுகையின் கீழ் தென் பகுதிக்கு ஐதராபாத் நிஜாமும், அவருக்குக் கீழ் ஆற்காட்டு நவாபும் இருந்து மக்களிடம் வரிவசூல் செய்து கொண்டு ஆட்சியையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆற்காடு நவாப் கும்பினியாரிடம் கடன் வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தைத் தங்களுக்குக் கீழுள்ள பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்து கொள்ளும் உரிமையை வழங்கினர். குளிர் விட்டுப்போன ஆங்கில கும்பினியார் பாளையக்காரர்களிடம் நயமாகவும், பயமுறுத்தியும் வரிவசூல் செய்தனர். வெள்ளைத் தோலைக் கண்டதும் துரை என்றும், பெண்களை துரைசாணி என்றும் அழைத்து மண்டியிடும் மோழைத்தனம் கொண்ட நம்மவர்கள், வெள்ளைத் துரைமார்களைக் கண்டதும் வணக்கம் சொல்லி கேட்டதைக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டனர்.
ஆனால் இந்தக் கும்பலில் சேராத, தன்மானமும், வீரமும் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையகாரர் கட்டபொம்மு நாயக்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய மறுத்தார். வரிவசூல் செய்யவந்தவர்களிடம், உழைப்பவர்கள் நாங்கள் உனக்கு ஏன் கப்பம் கட்டுவது என்று எதிர்த்து நின்றர். நாட்டில் எல்லா பாளையக்காரர்களும் அடிபணிந்து நிற்கும்போது நீ மட்டும் எதிர்ப்பதா என்று கும்பினி கலெக்டருக்குக் கோபம். அங்குதான் எழுந்தது பகை. புகைந்து எழுந்த விரோதப் புகை கொழுந்துவிட்டு எரிந்து பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரின் உயிருக்கு உலை வைத்தது.
டில்லி எஜமானர்கள் மீதும், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட நிஜாமும், ஆற்காட்டு நவாபு ஆகியோர் மீதும் கட்டபொம்மு நாயக்கர் மட்டுமல்ல, தமிழ் நாட்டு மக்களும் ஆத்திரமும் கோபமும் கொண்டனர். இதன் விளைவாக இது தென்னகத்தின் மக்கள் கலந்து கொண்ட போராக மாறியது. அப்படி நடந்த போரில் எந்த போர் தர்மமும் கடைபிடிக்கப்படவில்லை. கும்பினியாருக்கு இந்தியர்கள் மனிதர்களாகவே தெரியவில்லை. ஏதோ காட்டு விலங்குகளை அழிப்பது போல அழிக்கத் தொடங்கினர். போரில் தோற்ற கட்டபொம்முவை கயத்தாறு எனும் இடத்தில் ஒரு புளியமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றனர். அவரை மட்டுமல்லாமல், அவருக்குத் துணையாக இருந்த தானாபதி பிள்ளையையும் தூக்கிலிட்டுக் கொன்றனர். இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் தூக்கில் தொங்கிய தானாபதி பிள்ளையின் தலையை வெட்டி அதையொரு ஈட்டியில் சொருகி ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டனர். இதே போல போரில் இறந்த பெரிய மருதுவின் தலையை வெட்டி அவர் கட்டிய கோயிலின் எதிரில் ஈட்டியில் சொருகி ஊரார் பார்த்து பயப்படும்படியாக நட்டு வைத்தனர்.
வெள்ளைக் கும்பினியாரின் கொலை வெறி அத்துடன் அடங்கவில்லை. கட்டபொம்முவின் படைத் தளபதி வெள்ளையத் தேவனைத் துப்பாகியால் சுட்டுக் கொன்றனர். சவுந்தர பாண்டியன், நாகலாபுரம் ஜமீன் ஆகியோர் கொல்லப்பட்டனர். மருது சகோதரர்களும் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்றின் ஏடுகளில் தமிழ் மண்ணில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட அடக்குமுறைக்கு அளவே இல்லாமல் போனது. கும்பினியாரை எதிர்ப்போர் யாராயினும் அவர்கள் சுடப்பட்டனர். உயிர் விட்டவர்கள் தவிர, கை கால் முடமாகிப் போன ஆயிரமாயிரம் தமிழர்கள் அனாதைகளாகத் திரிந்தனர். உலகில் வேறெங்கும் நடக்க முடியாத அளவுக்கு கொடுங்கோல் இங்கு கோலோச்சியது.
கட்டபொம்மு நாயக்கரின் தம்பி ஊமைத்துரையும் இறுதியில் பிடிபட்டு 1801 ஆகஸ்ட் 10ஆம் தேதி தூக்கிலடப்பட்டபின் தென்னகத்து எதிர்ப்பு அடக்கப்பட்டது.
தமிழ் மக்களின் கண்முன்னால், இந்த மண்ணின் மானத்தைக் காக்க வேண்டி போராடிய ஒரு வீரத் திருமகனின் முயற்சி மண்ணோடு மண்ணாகியது. அவர்களது உயிர்த் தியாகத்துக்குப் பின் தென்னகத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உணர்வு ஏற்பட கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பால கங்காதர திலகரும், பிபின் சந்த்ர பாலும், லாலா லஜபதி ராயும் தோன்றிய காலத்தில் கத்தியும் துப்பாக்கியும் ஏந்திப் போரிடும் காலம் மாறிப்போயிருந்தது. பின்னர் வந்த மகாத்மா காந்தி அகிம்சை எனும் ஆயுதம் தாங்கி சத்தியாக்கிரகம் எனும் போர் முறையை அறிவித்து ஆயிரமாயிரம் தொண்டர்களின் தியாகத்தின் மீது இந்திய சுதந்திரத்தைப் பெற முடிந்தது என்பது வரலாற்றுச் செய்தி.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு நினைவுக் கோட்டை அமைக்கப்படவும், அவர் உயிர் துறந்த கயத்தாறு வீரம் விளைக்கும் பூமியாக சுற்றுலாத் தலமாக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை ஐயா ம.பொ.சி. எழுப்பினார். நினைவுக் கோட்டை எழுந்தது, கயத்தாறும் இன்று மக்கள் அறிந்த வீரபூமியாக மாறியிருக்கிறது.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 16 தேசிய தினமாக அனுசரிக்கப் படவேண்டுமென்பது ஐயா ம.பொ.சியின் கோரிக்கை. இந்திய சுதந்திரப் போரில் தொடக்க நாளாக அந்த நாள் இருக்க வேண்டுமென்பது அவர் விருப்பம்.
கட்டபொம்மனின் வீர வாழ்க்கை வரலாறு பள்ளிகளிலும், பொதுமக்கள் படிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டுமென்பது அவர் விருப்பம்.
அவரது எழுச்சி மிகு உரையில், “ஏ தமிழ்நாடே! வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு உயிர்நீத்த வீரன் கட்டபொம்மனை நினைவில் வையுங்கள். அடிமைத் தனத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான அவனது வீர தீர போராட்டம் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஆழப்பதிந்திருக்க வேண்டும்.”
ஐயா ம.பொ.சி. அவர்களின் விருப்பம், வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரும், வீரமும், புகழும் என்றென்றும் இந்த பூமியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான். அது நடக்கும். தன்னலமில்லா அந்த தலைவனின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். வாழ்க ஐயா ம.பொ.சி.புகழ்!
நன்றி – திரு கோபாலன் வெங்கடராமன்
திரு கோபாலன் வெங்கடராமன்
திரு கோபாலன் வெங்கடராமன் அவர்கள்,திருவையாறு பாரதி இயக்கத்தின் இலக்கியப் பிரிவான திருவையாறு பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனராக இருக்கிறார். ஐந்து ஆண்டுகள் பாரதியின் இலக்கியங்களைப் பாடங்களாக அச்சிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அனுப்பி ,ஆண்டு முடிவில் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் தலைவராக இருந்து,ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வருகிறார்.
ம.பொ.சி நடத்திய பத்திரிகைகள் மூலமாக தமிழிலும்,சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டார்.1954 முதல் சில ஆண்டுகள் பட்டுக்கோட்டையில் தமிழரசுக்கழக பத்திரிகைகளுக்கு முதல்வராக இருந்தார். செங்கோல், தமிழன் குரல், தமிழ் முழக்கம், சாட்டை, உமா, தமிழ் சினிமா ஆகியவைகளுக்கு முதல்வராகவும், வாசகராகவும் இருந்து வந்தார்.
சேலத்தில் நடந்த ம.பொ.சியின் தமிழரசுக்கழக மகாநாட்டில் பங்கு கொண்டார்.வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம், பாரதி போற்றிய பெரியோர்கள், திருவையாற்று வரலாறு, தஞ்சை மராத்திய மன்னர்கள் ஆகிய நூல்களும், மின்னூல்களாக தமிழ்நாட்டுத் தியாகிகள், இனியவை நாற்பது உரை, போன்ற சில நூல்களும், அச்சில் இருக்கும் பட்டினத்தார் பாடல்கள் எளிய உரையுடன் நூலும் இவர் எழுதி வெளிவந்திருக்கின்றன.
திரு கோபாலன் வெங்கடராமன்அவர்களின் பதிவுகள்:
www.bharathipayilagam.blogspot.com
www.ilakkiyapayilagam.blogspot.com
www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
www.tamilnaduthyagigal.blogspot.com.