சென்னை, கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு ஆகிய உள்நாட்டு வெளிநாட்டு வானொலி நிலையங்களிலே தலைவர் மா.பொ.சி அவர்கள், கட்டபொம்மனை பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்டு, வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஒலிபரப்பப்பட்டு வந்தன.
பின்னர் சிலம்புச் செல்வர் மா.பொ.சி எழுதிய “வீரபாண்டிய கட்டபொம்மன்” என்னும் நூலினை தழுவி திரு. பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்சார் “வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்னும் பெயருடைய முழு நீள வண்ணப்படத்தை சிலம்புச் செல்வரின் மேற்பாற்வையில் படப்பிடிப்பை நடத்தி தயாரித்து வெளியிட்டனர். இப்படம் 100 நாட்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றியுலா வந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக அற்புதமாக நடித்தார். இப்படம் தெலுங்கு மொழியிலும் “டப்” செய்யப்பட்டு ஆந்திரா நாட்டிலும் பவனி வந்தது. இவ்வாறு திரு. மா.பொ.சிவஞானம், வீரபாண்டிய கட்டபொம்மன் புகழினை பட்டி தொட்டியெல்லாம் பேசி, அவனை முதல் சுதந்திர வீரன் என்று முழக்கமிட்டார்.
எங்கள் சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் மா.பொ.சி அறக்கட்டளையின் சார்பில் சிலம்புச் செல்வரின் 109வது (ஜுன்-26-06-2014) பிறந்தநாள் விழாவில், முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழை வலைதளத்தில் வெளியிடுவதற்கு பெருமை கொள்கிறோம். வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு விவரங்களையும், வீரபாண்டியகட்டபொம்மன்.காம் வலைதளத்தில் நீங்கள் காணலாம்.