வீரபாண்டிய கட்டபொம்மன் - ம.பொ.சி பதிப்பகம்
சிலம்புச்செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.
வீரபாண்டியகட்டபொம்மன்.காம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலிடப்பட்டார்.இந்த மாவீரனை "கொள்ளைக்காரன்" என்றும் "கொலைகாரன்" என்றும் பொய்யாக வருணித்து நூல்களையும் எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள். அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள்.இப்படி ஒன்றை நூற்றாண்டு காலம், சரித்திராசிரியர்களால் நிலை நாட்டப்பட்டுவிட்ட பழியிலிருந்து கட்டபொம்மனின் புகழ் மிக்க வரலாற்றை மீட்டுக் கொடுத்தது சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசு கழகம்.வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழைப்பரப்ப தமிழரசு கழகமும் அதன் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சிகளால் இன்று கட்டபொம்மன் விடுதலை போருக்கு வித்திட்ட வீரனே என்ற உண்மையை உலகமே ஒப்புக்கொண்டு விட்டது.சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம். அந்த வீர்னின் புகழைப்பரப்பிய வரலாறு கீழ்வருமாறு:
முதல் நூல்:1949 ஜுலைத் திங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் திரு.ம.பொ.சி ஒரு நூல் எழுதி வெளியிட்டார். அதன் பின்னரும் "சுதந்திர வீரன் கட்டபொம்மன்", "கயத்தாற்றில் கட்டபொம்மன்", "பொம்மன் புகழிழும் போட்டியா?" என்னும் பெயருடைய நூல்களை எழுதி வெளியிட்டார்..சிலம்புச் செல்வர் வாழ்ந்த காலத்தில், தமது "தமிழ்முரசு", "தமிழன் குரல்", "செங்கோல்" ஆகிய ஏடுகளிலும் இன்னும் புகழ்மிக்க பல தமிழ் பத்திரிக்கைககளிலும் கட்டபொம்மனைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் திரு.ம.பொ.சி எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்தன.முதன் முதலில் கட்டபொம்மன் விழா:முதன் முதலாக 1949 அக்டோபர் 16-ல் சென்னை இராஜாஜி மண்டபத்திற்க்கு பின்புறம் உள்ள பூங்காவில் தமிழரசு கழகத்தின் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, பன்மொழிப்புலவர் தொ.பா.மீனாட்சி சுந்தரனார் மற்றும் தமிழரசுக்கழகத்தலைவர்களும் இதில் கலந்து கொண்டு பேசினர்.இதன் பின்னர் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலுள்ள நகரங்களிலும், கிராமங்களிலும், அக்டோபர் 16-ல் தமிழரசு கழகத்தின் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வந்தது.கவிஞர் - அறிஞர் புகழ்மாலை:சிலம்புச் செல்வர் ம.பொ.சி யின் விருப்பத்துக்கு இசைந்து, கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை ஆகிய கவிஞர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனை புகழ்ந்து, செய்யுட்கள் பலவற்றை கொண்ட கவிதைகளை பாடி உள்ளனர். இராஜாஜி, அண்ணா ஆகிய அறிஞர் பெருமக்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை புகழ்ந்து பேசியுள்ளனர்.1957 சென்னை செயின்ட் .மேரிஸ் மண்டபத்தில், தமிழரசுக்கழகத்தினர் நடத்திய கட்டபொம்மன் விழாவிலே, இராஜாஜி அவர்கள் தாமாகவே திடீரென தோன்றி, பொம்மனுடைய புகழை விவரித்துப் பேசினார்.வானொலி மற்றும் திரைப்படங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:சென்னை, கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு ஆகிய உள்நாட்டு வெளிநாட்டு வானொலி நிலையங்களிலே தலைவர் ம.பொ.சி அவர்கள், கட்டபொம்மனை பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்டு, வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஒலிபரப்பப்பட்டு வந்தன.பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி எழுதிய "வீரபாண்டிய கட்டபொம்மன்" என்னும் நூலினை தழுவி திரு. பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்சார் "வீரபாண்டிய கட்டபொம்மன்" என்னும் பெயருடைய முழு நீள வண்ணப்படத்தை சிலம்புச் செல்வரின் மேற்பாற்வையில் படப்பிடிப்பை நடத்தி தயாரித்து வெளியிட்டனர். இப்படம் 100 நாட்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றியுலா வந்தது.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக அற்புதமாக நடித்தார். இப்படம் தெலுங்கு மொழியிலும் "டப்" செய்யப்பட்டு ஆந்திரா நாட்டிலும் பவனி வந்தது. இவ்வாறு திரு.ம.பொ.சிவஞானம், வீரபாண்டிய கட்டபொம்மன் புகழினை பட்டி தொட்டியெல்லாம் பேசி, அவனை முதல் சுதந்திர வீரன் என்று முழக்கமிட்டார்.எங்கள் சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அறக்கட்டளையின் சார்பில் சிலம்புச் செல்வரின் 109வது (ஜுன்-26-06-2014) பிறந்தநாள் விழாவில், முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழை வலைதளத்தில் வெளியிடுவதற்கு பெருமை கொள்கிறோம். வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு விவரங்களையும், வீரபாண்டியகட்டபொம்மன்.காம் வலைதளத்தில் நீங்கள் காணலாம்.